Sunday 18 December 2011

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு...

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு...
எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கு நடத்த இருந்த தேசிய நுழைவு தேர்வை ஓராண்டு தள்ளிவைக்க அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் மனுவை அரசே வாபஸ் பெறுமா அல்லது நாங்கள் தள்ளுபடி செய்யட்டுமா என்று கேட்டனர்.

நாடு முழுவதும் உள்ள எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ் மற்றும் பட்ட மேற்படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் ஒரே நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இந்த தேர்வை இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பான வழக்கில் வரும் 2012&13ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் அனுமதி அளித்தது.

இதற்கிடையே, எம்.பி.பி.எஸ் படிப்புக்கான தேசிய நுழைவு தேர்வை ஓராண்டுக்கு தள்ளிவைக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு, நீதிபதிகள் எச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகள், நடைமுறைகள் தயாராக இருப்பதாக அரசு தெரிவித்தது.  இந்த நிலையில், அதை ஓராண்டுக்கு தள்ளிவைக்க அனுமதி கேட்பது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற மனுக்களை அரசு ஏன் தாக்கல் செய்கிறது. இந்த மனுவை அரசே வாபஸ் பெறுகிறதா? அல்லது அதை நாங்கள் தள்ளுபடி செய்யட்டுமா?
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.