சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தலித் நீதிபதி படும்பாடு!
சென்னை: தசலித் இனத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மற்ற நீதிபதிகள் சிலர் தன்னை அவமானப்படுத்துவதாகவும், பொறுக்க முடியாத அளவுக்கு தனது தன்மானத்தை சோதிப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிஎஸ் கர்ணன் புகார் கூறியுள்ளார்.
அவரது இந்தப் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகளே சாதி வெறி பிடித்து அலைவதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
இது தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் நலனுக்கான தேசிய கமிஷனில், நீதிபதி கர்ணன் புகார் தந்துள்ளார். ஜனாதிபதிக்கும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் புகார் மனுவின் நகல்களை அவர் அனுப்பியுள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் வியாழக்கிழமை நீதிபதி கர்ணன் கூறுகையில், “சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒரு சிலர், நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் வேண்டுமென்றே அவமானப்படுத்துகின்றனர். இதுகுறித்து தாழ்த்தப்பட்டோர் நலனுக்கான தேசிய கமிஷனில் புகார் அளித்துள்ளேன்.
எனது புகார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டதாகவும், விசாரணை நடத்த அவர் அனுமதித்திருப்பதாகவும், ஊடக செய்திகள் மூலம் தெரிந்து கொண்டேன். இன்னும் விசாரணை துவங்கப்படவில்லை. விசாரணை துவங்கினால் எனது புகாரை நிரூபிப்பேன்.
எனக்கு 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்தே இந்த அவமரியாதைகள் நடந்து கொண்டுள்ளன. ஆனால், நீதிமன்ற மாண்பை காப்பதற்காக இதுவரை பொறுத்துக் கொண்டிருந்தேன். இதனால் தான் இதுவரை இது குறித்து வெளியே சொல்லாமல் இருந்தேன்.
நான் சுயமரியாதை உள்ளவன். அதனால் தான் என்னை குறி வைக்கின்றனர். எனக்கு நேர்ந்த அவமானங்கள் குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஏன் புகார் சொல்லவில்லை என்று கேட்கின்றனர். அதற்கான அவசியம் இல்லை.
தாழ்த்தப்பட்டோர் நலனுக்கான தேசிய கமிஷன், ஒரு கண்காணிப்பு அமைப்பு. தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால், அதை கண்காணிக்கும் பொறுப்பு இந்த கமிஷனுக்கு உள்ளது. ஜனாதிபதியின் கீழ் இந்த கமிஷன் இயங்குகிறது. இதனால்தான் நேரடியாக அங்கேயே புகாரை சொன்னேன்.
என்னை அவமானப்படுத்திய நீதிபதிகள் யார் என்பதை விசாரணையின் போது கூறுவேன். தேநீர் விருந்து, மதிய உணவு, டின்னர், நீதிபதிகள் குழு என நீதிபதிகள் ஒன்றாக கூடும் இடங்களில் எல்லாமே நான் அவமானபடுத்தப்பட்டேன். நீதிமன்ற விழாக்களில் நான் பங்கு பெற வாய்ப்பு கூட அளிப்பதில்லை.
ஷூ காலால் மிதித்த சக நீதிபதி
ஒரு திருமண நிகழ்ச்சியில் என்னை ஷூ அணிந்திருந்த ஒரு நீதிபதி வேண்டுமென்றே காலால் மிதித்துவிட்டு, பின்னர் ஸாரி என்றார். குடியரசு நாள் கொண்டாட்டத்தின்போது மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் என் பெயர் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை கிழித்து கீழே எறிந்து காலால் போட்டு மிதித்தார் இன்னொரு நீதிபதி.
இந்த சம்பவங்களை இரண்டு சக நீதிபதிகள் நேரில் பார்த்தனர். எனக்கு நேர்ந்த தொல்லைகள் பற்றி, மற்ற நீதிபதிகளிடம் நான் தெரிவிக்கவில்லை. இது ஒரு கருப்பான அத்தியாயம்.
நீதிபதிகள் சிலருக்கு குறுகிய மனப்பான்மையும், ஜாதி ரீதியில் ஆதிக்க மனப்பான்மையும் உள்ளது. அதை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகளிடம் காட்டுகின்றனர்.
நீதிபதிகள் அனைவரும் பெருந்தன்மையுடனும், பரந்த மனப்பான்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். ஜாதிரீதியிலான பாகுபாடு மன வேதனை தருகிறது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மற்ற நீதிபதிகள் அவமரியாதை செய்யப்படுகின்றனரா? என்று கேட்டதற்கு, நான் சுயமரியாதை இருப்பதால் தான் கஷ்டங்களை எதிர்கொள்கிறேன். தலித் சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் சிலர், சுயமரியாதையை கடைபிடிக்க தவறுகின்றனர். ஆனால், நான் சுயமரியாதையை கடைபிடிப்பதால்தான், கஷ்டங்களை எதிர்கொள்கிறேன்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதிகள் கனகராஜ், அசோக்குமார், பி.டி.தினகரன், வெங்கடாசலம், ஜெயபால் ஆகியோர் சுயமரியாதை உள்ளவர்கள். என்னைப் போலவே அவர்களும் பிரச்சனைகளை அனுபவித்தனர். மிகுந்த நீதிமானாகத் திகழ்ந்த அசோக்குமாருக்கு நேர்ந்த அவமானங்கள் கொஞ்சமல்ல.
உயர் நீதிமன்றத்தில் மட்டுமல்ல தலித், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் மீது கூட துன்புறுத்தல் இருக்கிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் எனது புகார் தொடர்பாக விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். எனது புகார் தொடர்பாக எப்போது என்னிடம் கேட்டாலும் உரிய ஆதாரங்களை அளிப்பேன். அவமானப்படுத்தியவர்களின் பெயர்களையும் வெளியிடுவேன்.
அதுவரை இந்த விவகாரத்தில் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்,” என்றார்.
நீதிபதி கர்ணனின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்திக்க நிருபர்கள் முயன்றனர். ஆனால், அவரைச் சந்திக்கவே முடியவில்லை.
நெருப்பு இல்லாமல் புகை வருவது இல்லை. சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்கள் சந்திக்காத சாதீய கொடுமைகளை வேறு எவரும் சந்த்தித்ருக்க மாட்டார்கள். அந்த கொடுமைகளுக்காக போராடியதன் விளைவே தலித்துகளுக்கு இவளவாவது சுதந்திரம் கிடைத்தது.. மீண்டும் ஒரு சுதந்திர போர் வரவேண்டும். தலித்துகளை இளக்காரமாக பார்ர்கும் தேச, சமூக துரோகிகளை வேரறுக்க வேண்டும். உலகத்தின் உயர்ந்த பதவி, கடவுளுக்கு நிகரான பதவி வகிக்கும் நீதிபதிகள் இப்படி நடந்துகொள்வது கேவலமாக உள்ளது. அப்படிப்பட்டவர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும். இருபத்தோன்றாம் நூற்றாண்டை தாண்டினாலும் மாறாத இந்த கொடுமை என்றுதான் மாறுமோ?